Sunday 27 September 2015

A sermon

Greetings.

Lately, a member of our congregation lost his four year old boy.  I was asked to give message on the eighth day. Here I share my message with you.




Sermon

Song: ‘We shall overcome’

Bible readings: (1) 2 Samuel 12:15-23, (2) Romans 14:7-9, (3) Mark 4:35-41

ஒரு அசந்தர்ப்பமான சூழலில் உங்கள்முன் தேவனுடைய வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்டக் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, மொத்த சபையாருக்குமே பதில் சொல்ல வேண்டியவனாக உணர்கிறேன்.

வாழ்வில் சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. “Why me? என்று நாம் ஒரு கேள்வி எழுப்பினால், கடவுள், ‘Why not you? என மறு கேள்வி எழுப்புகிறார் என்கிறார் ஸ்டான்லி அண்ணன்.  ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அதுத் தெரியாமற்போனாலோ வேதாந்தம்’ என்கிற கண்ணதாசன், ‘ஏனென்றக் கேள்வியொன்று என்றைக்கும் தங்கும், மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்’ என்கிறார்.

என் நண்பரும், அரசு மருத்துவருமாயிருக்கிற ஒருவரிடம் என் ஆற்றாமையை நான் வெளிப்படுத்தியபோது, அவர் கூறினார், “பிள்ளையைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள். அவன் நிச்சயமாகக் கடவுளிடம் போயிருப்பான். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோருக்கான சோதனை. இதை நாங்கள் ‘புத்ர சோகம்’ என்போம்.  அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் நான் சரும நோயால் அவதிப் பட்டபோது, அதே போன்ற பிரச்சினையால் பாதிக்கப் பட்டிருந்த நண்பர் ஒருவர் ஒரு வார இதழை என்னிடம் கொடுத்தார். அதில், மிகவும் கொடிய பாவம் செய்தவர்களுக்குத்தான் இத்தகைய நோய் வருமென்றிருந்தது. நான் புன்னகையுடன் அவரை நோக்கி, “எனக்கு பழையப் பாடலொன்று நினைவுக்கு வருகிறது. ‘யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா?’ எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கண்கள் கலங்கி விட்டன. அவர் பதறியடித்துக் கொண்டு என்னருகில் வந்து, “அவன் ஏதோ போட்டிருக்கிறான். நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றார்.

நம் வாழ்வில் ஒரு சறுக்கல் ஏற்படும்போது இது ஏன் நடந்தது என ஆய்வதில் தவறில்லை. (சங்:139:23,24) ’வயிற்றுவலி தாங்கவில்லை’ என்றால், ‘என்ன சாப்பிட்டீங்க?’ என்றுதான் மருத்துவர் கேட்பார். கடவுளால் உத்தமன் என சாட்சி பெற்ற யோபுவை அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த நண்பர்கள் குடையவில்லையா? ஒரு படிவம் நிரப்பும்போது பொருந்தாத கேள்விகளுக்கு NA போட்டுவிடுகிறோமல்லவா, அது போல்தான் இதுவும்.

எனக்குச் சொல்லப்பட்ட இன்னொரு ஆலோசனை, ‘Let them cry’. லாசரு இறந்தபோது நமது ஆண்டவர் அழுதார். அழுவாரோடு அழுங்கள் என்றுதான் வேதமும் சொல்கிறது. அழுவதற்கு பெலனில்லாமற் போகுமட்டும் அழுதபின், தாவீது கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டதைப் போல திடப்படலாம். (1சாமு:30:4-6)

பெற்றோர் சந்திக்ககூடிய சில சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1.குற்ற உணர்ச்சி: சரியாகக் கவனிக்கவில்லையோ? இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்காலாமோ? நியாயமான கேள்விகள்தான். ஆனால், நம் காலங்கள் கடவுளின் கரங்களில் அல்லவோ இருக்கின்றன?

2. கடவுள் மேல் எழும் கோபம் அல்லது ஏமாற்றம்: எந்தவித முகாந்திரமும் இன்றி தான் வேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது யோபுவும் தன் மனக்கிலேசங்களைக் கொட்டித் தீர்த்தார். (யோபு. 9:12) ஆனால், கடவுள் அதனைக் குறித்து என்ன சொல்கிறார் பாருங்கள். 42:7. முரண்டு பிடிக்கும் குழந்தையைப்போல் கோபமாயிருந்த யோனாவை அவர் எப்படி சமாதானம் செய்கிறார் எனப் பாருங்கள். யோனா 4:4, 9-11 என்னைப் பொறுத்தவரை, இந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும் கடவுளுக்கு பயப்படும் பயமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஈசாக்கின் பயபக்திக்குரியவர் நம்மெல்லாருக்குமே அப்படிப்பட்டவராகத்தானிருக்கிறார். (சங்.2:11)  அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் என்ற வசனத்தின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொள்ளுங்கள். (சங்:104:24-31). எல்லாவற்றுக்கும் மேலாக, அவருக்கும் ஒரே பிள்ளைதான். யோவான் 3:16.

3.பழி சாற்றுதல்: சாத்தானுக்கு இன்னுமொரு பெயர் இருக்கிறது. ‘சகோதரர் மேல் குற்றம் சாட்டுகிறவன்’.(வெளி;12:10)  ஓரளவுக்கு மெச்சூர்டான விசுவாசிக்கு கடவுளின் குரல் எது, மனிதனின் குரல் எது, பிசாசின் குரல் எது எனக் கண்டுபிடிக்கும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். யோபுவின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.(யோபு 2:9) மனைவிதான் பேசினாள். ஆனால் அது உண்மையில் யார் குரலென்று அவர் அறிந்திருந்ததால் பெரிய அழிவிலிருந்துத் தப்பினார்.

மாற்கு 4:35-41 ல் நாம் வாசிக்கும் அந்த சம்பவத்தைக் குறித்து கொஞ்சம் தியானிப்போம். இஸ்ரேலின் வடபகுதியில் இருக்கும் இந்த கலிலேயா கடல் ஒரு பெரிய அளவிலான ஏரியைப் போலிருக்குமே தவிர, பெரிய கடல் அல்ல. 21கிமீ நீளமும் 12கிமீ அகலமும் கொண்ட மிகச்சிறியக் கடல். நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகக் காணப்படும் கடலது. அந்த நாட்டு மீனவர்களுக்கு அதுதான் வாழ்வாதாரம். நமது ஆண்டவரின் தலமைச்செயலகம் அதுவே. பெரும்பான்மையான அவருடைய ஊழியங்களும், அவர் செய்த அற்புதங்களும் அதைச் சுற்றியே நடந்தன. அவரது முதல் சீடர்கள் கிடைத்த இடமும் அதுவே.  அத்தகையக் கடலில் அவர்கள் பயணம் செய்தபோது அவர்களை அலைக்கழிக்க உருவான புயலும் எதிர்பாராத நிகழ்வல்ல.  ஏரி அளவு மட்டுமே உள்ள அந்தக் கடல், உண்மையான கடல் மட்டத்துக்கு 680 அடி கீழே அமைந்துள்ளது.  நான்கு புறமும் சூழ்ந்துள்ள மலைகளிலிருந்து புறப்படும் காற்று ஹெர்மோன் மலை உயரத்திலிருந்து பேரோசையுள்ள காற்றாய் வீசும். மெடிட்றேனியன் கடலிலிருந்து வீசும் காற்று அதனை எதிர்கொள்ளும்போது, இரண்டு காற்றும் சேர்ந்து கலிலேயா கடலை உண்டு இல்லை என்றாக்கிவிடும். மிகவும் நாடகத்தன்மையுடன் நிகழும் இந்த நிகழ்வு, விரைவிலேயே மறைந்தும் விடும்.

 என்ன சொல்ல வருகிறேன் என்றால், பூமி கடவுள் படைத்த போது இருந்தாற்போல் இப்போது இல்லை என்பதே.(ஆதி.1:10) எப்போது பாவம் உலகில் நுழைந்ததோ, அப்போதே எல்லாம் மாறி விட்டன.  நான் முன்னரே குறிப்பிட்ட அதே மருத்துவர் ஒரு நாள் மிகவும் மன உளைச்சலோடு, “நான் காணும் இடமெங்கும் உள்ள யாவரும் ஏதாவது கஷ்டத்திலேயே இருக்கிறார்கள் உடல் ரீதியாக, மனரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு அவர்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.  உங்கள் ரிலிஜன் என்ன சொல்கிறது?” என்றார்.  “எனக்குத் தெரிந்து இயேசு deceptive ஆக ஒரு வார்த்தையும் சொன்னதில்லை. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் கூறினார். (யோவான்16:33) ஆனாலும் நான் உங்களுடன் இருப்பேன் என்றும் கூறினார்” (மத்.28:20) என்றேன்.  காற்று வீசியது, கடல் பொங்கியது உண்மைதான். ஆனால் படகில் இயேசு இருந்தார்.  அவரில்லாத ஒரு சூழலை எண்ணிப் பாருங்கள்.  சுகபோக உபதேசப் பிரசங்கிகள், இயேசுவை ஏற்றுக் கொண்டு விட்டால், வாழ்வே சொர்க்கமாக மாறிவிடும் என்பது போல பேசி, மக்களை உலகத்தின் பின் ஓட வைத்து விடுகிறார்கள். ஆனால், வேதம் முழுவதுமே கடவுளின் தாசர்கள் பாடுகளினூடாகவே பயணம் செய்திருக்கிறார்கள். எனவே, முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கர்த்தரின் பிள்ளைகளின் வாழ்விலும் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன என்பதே.  இத்தகையத் தருணங்களில் கடவுள் ஒன்றுமே செய்யாதது போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. குழந்தையின் அழுகுரலைக் கேட்கும் தாயைப் போல, ஆட்டின் குரலை அறிந்திருக்கிற மேய்ப்பனைப்போல ஆண்டவரும் நம் அழுகுரலைக் கேட்கிறவராகவே இருக்கிறார்.  (ஏசா.59:1) பயமும், அவநம்பிக்கையும்,ஏமாற்றமும் கதவைத் தட்டும்போது, நமது விசுவாசம்தான் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும்.  (2திமோ. 1:7)

நமது வாழ்வின் மையப்பொருளாக இருக்க வேண்டிய ஆண்டவரை எங்கோ ஒரு ஓரத்துக்குக் கொண்டுபோய் விடுகிறோம். ஒரே நாளில் இப்படி நடப்பதில்லை, கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக நம்மையறியாமலேயே இது நடந்தேறுகின்றது. திடீரென்று வீசும் புயல்தான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதையே நமக்குக் காட்டுகிறது. மறுபடியும் அவரை நோக்கிப் பார்க்க, நமது வாழ்வின் மையப்பொருள் அவரே என்பதை புதுப்பித்துக் கொள்ள இதுவே தருணம்.

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் மார்க் அண்டனி சொல்வான்: ‘மனிதர்கள் செய்யும் நன்மைகள் எல்லாம் அவர்களது எலும்புகளுடனேயே புதைக்கப்பட்டு விடுகின்றன.  ஆனால், அவர்கள் செய்த தீமைகள் மட்டும் என்றும் நினைவுகூரப் படுகின்றன’ என்று. தாவீது விஷயத்தில் அது முற்றிலும் உண்மை.  தேவனே அவரை தம் இதயத்துக்கு ஏற்றவன் என்று சொல்லிவிட்டபோதும் நாம் அவர் செய்துவிட்ட குற்றங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமக்கு ஏற்பட்ட பேரிழப்புக்குப்பின் அவர் எப்படி react செய்தார் எனப் பாருங்கள். 2சாமு.12:23.  1தெச. 5:16-18.

முத்தாய்ப்பாக, ரோமர் 14:7-9 ல் கூறியுள்ளபடி நாம் அவருக்கென்று வாழக் கடமைப் பட்டிருக்கிறோம். இப்படியாகவே இந்த விசுவாச ஓட்டத்தை சீராக ஓடி நிறைவு செய்து அழியாததும், வாடாததுமான ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள கர்த்தர் தாமே நம்மைத் திடப்படுத்துவாராக. ஆமென்.