Thursday 8 October 2015



Praise the Lord

இறை வேண்டுதலில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

வேதபாடங்கள்

(1)   2 இராஜக்கள் 20:1-11,  (2)  1 தெச. 5:12-28, (3) மாற்கு 7:24-30

அருள்நாதர் இயேசுவின் இனிய திருப்பெயரால் உங்கள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நாம் தியானிக்க வேண்டிய கருப்பொருள் ‘இறைவேண்டுதலில் உறுதியுடன் நிலைத்திருத்தல்’ என்பதாகும். சிந்தனையைத் தூண்டும் பாடலொன்றின் அழகான சரணமிது:

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.

ஜெபம் என்பது கடவுளோடு நாம் செய்யும் உரையாடல். நாம் யாரிடம் மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்களோடு பேசும்போது நேரம் போவதேத் தெரிவதில்லை அல்லவா? அதுபோல் தான் கடவுளும் நமது உற்ற நண்பராக, தந்தையாக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருக்கிறார். அதிலும் ஜீவனுள்ள மெய்யான கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ள நமக்கு, கோவில் குளத்துக்குப் போய்தான் அல்லது ஒரு சிலையின் முன் பணிந்துதான் கடவுளோடு உரையாட, உறவாட வேண்டும் என்ற அவசியமில்லை.  உண்மையாக நாம் பாக்கியம் பெற்றவர்கள்தாம். திருமறையும் அப்படித்தான் கூறுகிறது:
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது’- சங்.144:15.

ஒருமுறை ஒரு பெண் ஆயரில்லத்துக்கு ஓடி வந்து, “அய்யா, என் தந்தை மிகவும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். தாங்கள் வந்து அவருக்காக ஜெபம் செய்ய வேண்டும்” என்றாள். ஆயரும் உடனே அந்த மனிதரின் வீட்டுக்குச் சென்றார். அந்த மனிதர் படுத்திருந்த கட்டிலின் அருகே ஒரு நாற்காலியும் இருந்தது. “நான் வருவேன் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா? நாற்காலியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே’? என்று கேட்ட அய்யரை ஒருவித சங்கடத்துடன் நோக்கிய அந்த மனிதர், “இல்லீங்க அய்யா, வேதமெல்லாம் வாசிப்பேன், கோவிலுக்கு தவறாமல் போவேன். ஆனால் ஜெபிக்க மட்டும் தெரியாது. என் நண்பன் முத்துவிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவன் சொன்னான், “என்மீது மிகவும் அன்பும் நட்பும் இருப்பதால்தானே நேரம் போவது தெரியாமல் என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறாய். அதுபோல்தான் ஆண்டவருடன் பேசுவதும். வேண்டுமானால் நான் உட்கார்ந்திருக்கும் இந்த நாற்காலி காலியாக இருக்கும்போது அதில் இயேசு அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொண்டு மனதிற்குள் அவருடன் பேசு” என்றான். இப்பொது அதுவே எனக்குப் பழக்கமாகி விட்டது” என்றார். ஆயர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். உருக்கமாக அந்த மனிதருக்காக ஜெபித்துவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பெண் வந்து தன் தந்தை இறந்துவிட்டதாகக் கூறினாள். ஆயரும் அந்தப் பெண்ணும் போய்க்கொண்டிருக்கும்போது அந்தப்பெண் கூறினாள், “அய்யா, என் தந்தையின் மரணம் மிகவும் அமைதியாக அமைந்தது, ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவில்லை.  படுக்கையை விட்டுத் திரும்பி என்தந்தையின் தலை அருகில் இருந்த நாற்காலியின்மீது இருந்தது. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றாள். ஆயர் அந்த மனிதர் இயேசுவின் மடியில் உயிர்நீத்திருக்கிறாரென்று புரிந்துக்கொண்டார். ஆக, ஜெபம் என்பது கடவுளோடு நாம் கொள்ளும் ஆத்மார்த்தமான உறவு என்றாகிறது.
இந்த அருளுரையை, கண்ணீருடன் ஜெபித்தல், காத்திருந்து ஜெபித்தல் மற்றும் கருத்தோடு ஜெபித்தல் என்று மூன்று தலைப்புகளில் தியானிப்போம்.

கண்ணீருடன் ஜெபித்தல்:

நாம் முதலாம் வேதபாடத்தில் வாசிக்கக் கேட்ட எசேக்கியா, தன்மரணம் முன்னறிவிக்கப்பட்டபோது மிகவும் அழுதார் என்று பார்க்கிறோம். மனிதனின் மகத்தான பயங்களில் மரணபயமுமொன்று. எவ்வளவு முதுமை, இயலாமை இருந்தாலும் மரணத்தின் நிச்சயமற்ற தன்மை நமக்கு அச்சமூட்டுவதாகத்தானிருக்கிறது.  தள்ளாத முதுமையிலும் விறகு பொறுக்கி வயிறு வளர்க்க வேண்டியிருந்த ஒரு பெண்மணி, ஏய், எமனே, நீ வரமட்டாயா? என்றாளாம். எமன் உடனே வந்து ‘என்ன வேண்டும்’? என்றுக் கேட்டானாம். திகைத்துப்போன அந்தப் பாட்டி, “ஒன்னுமில்லே, இந்த விறகுக்கட்ட கொஞ்சம் தூக்கி விடேன்” என்றாளாம். சங்கீதக்காரனின் அனுபவம் வேறாக இருந்தது.“   “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” என்றாரவர். ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய அனுபவம் வேறாக இருப்பதால் கடவுள் நம் அவிசுவாசத்தை, அச்சத்தைக் கண்டு சினம் கொள்வதில்லை. வளர்ந்த, ஒரு நாட்டுக்கே அதிபதியான அந்த ‘ராஜக்குழந்தைக்கு’ கடவுளிடமிருந்து வந்த பதில் நம்மை மலைக்க வைக்கிறது:  “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்”.  ஆம், அவர் காண்கிறவராக, கேட்கிறவராக இருக்கிறார். கைப்பிள்ளையோடு கணவனால் துரத்தி விடப்பட்ட ஆகாரின் அழுகுரல் கேட்டு பாலை நிலத்தில் தண்ணீர் ஓடிவரச்செய்த கடவுள் நம் கண்ணீரையும் துடைக்கவல்லவராக இருக்கிறார். நம்முடைய இழப்புகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நினைக்கும்பொழுது வெள்ளம்போல் புரண்டு வரும் கண்ணீர், நமது பாவங்களை நினைத்து வருந்தும்போதும் வந்தால் நன்றாயிருக்கும்.  ஏசாயா 59:2ல் நாம் வாசிக்கிறபடியே நமது பாவங்களே அவர் நமக்கு செவி கொடுக்காதபடிக்கு அவர் முகத்தை நமக்கு மறைக்கிறது.  குறிப்பாக இந்த லெந்து காலத்தில் சற்று நேரமெடுத்து, தனிமையில் அமர்ந்து நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து இறையன்புக்கும் பிறரன்புக்கும் விரோதமாக நமக்குள் கிரியை செய்கிற யாவையும் விட்டொழித்து விட்டால், சங். 65:2-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ கடவுள் நமக்கு பதில் தர வல்லவராயிருக்கிறார்.

காத்திருந்து ஜெபித்தல்:

நாம் வாழும் இந்த யுகம் அவசர யுகமாயிருக்கிறது. ஒரு குழந்தை ஜெபம் செய்வது போன்ற ஒரு வாழ்த்து மடலை என் நண்பன் எனக்கு அனுப்பியிருந்தான். கண்களை இறுக மூடியவாறு அக்குழந்தை மிகத் தீவிரமாக ஜெபிக்கிறது: “கடவுளே, எனக்குப் பொறுமையைத் தாரும், இப்பவே தாரும்” கேட்பது பொறுமையை, ஆனால் அதைக்கூடப் பொறுமையோடு கேட்கும் நிலையில் நாமில்லை.  உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கை, நாம் வாகனங்களை ஓட்டும் விதம், நாம் கலந்துக் கொள்ளும் நல்லது கெட்டது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லாம் ஒரே அவசரம் தான். என்ன படிப்பது, என்ன வேலை, யாரை மணப்பது எதற்குமே உரிய நேரமெடுத்து யோசிப்பதுமில்லை, ஜெபிப்பதுமில்லை, பெரியவர்கள், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்பதுமில்லை. ஜெபித்த ஜெபத்துக்கு உடனே பதில் கிடைக்கவில்லை யென்றால் உடனே கடவுளின்மீது மனத்தாங்கல் அடைகிறோம். ஏசாயாவின் புத்தகம் 40:31 சொல்கிறது: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்”.  சங்கீதக்காரனின் அனுபவமும் அதுவாகவே இருக்கிறது:  “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்”. (சங்.40:1)  நாம் வாசிக்கக் கேட்ட தூய மாற்கு எழுதிய சுவிசேஷத்தில் நாம் காணும் அந்தப் பெண்ணிடம் ஆண்டவர் சற்று கடுமையாகப் பேசுவதாகவேத் தோன்றுகிறது. வசனங்கள் 27, 28-ஆகியவற்றைப் படியுங்கள். அந்தப் பெண் யூதகுலத்தவள் அல்ல, இருப்பினும் அவளது பொறுமையும், பணிவும் அவள் மகளுக்கு விடுதலையை மட்டுமல்ல, அவளிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளும்படியாக வேதத்தில் இடம் பெறும் பாக்கியத்தையும் கொடுத்தது. கர்த்தர் சொல்வதைக் கேளுங்கள்:  “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை”(ஏசா.49:23)



கருத்தாய் ஜெபித்தல்:

தம்முடைய ஜெப அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துக்கொள்ளும் பரிசுத்த பவுல் கூறுகிறார்: “நான் கருத்தோடு விண்ணப்பம் பண்ணுவேன்” (1கொரி. 14:15)  ஏனோதானோ ஜெபங்களும், நமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள ஏறெடுக்கப்படுகிற ஜெபங்களும், வேதத்துக்கு செவி கொடாதவர்களின் ஜெபங்களும் கர்த்தருக்கு அருவருப்புண்டாக்குகின்றன. (நீதி.28:9, யாக்.4:3)  ஆண்டவராகிய இயேசு நமக்கு முன்மாதிரியான ஒர் ஜெபவீரராகத் திகழ்ந்தார். பகல் முழுவதும் ஊழியம், இரவு முழுவதும் ஜெபம்- இதுதான் அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது. 1தெச. 5:17 நம்மை இடைவிடாமல் ஜெபம் செய்ய ஊக்குவிக்கிறது. தூய லூக்காவின் சுவிசேஷம் 18:1-7-ல் அவர் சொல்கிற உவமையில் வருகிற கடின இதயமுள்ள அந்த நியாயதிபதியோடு இரக்கமும், பொறுமையும், நீடியசாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவராகிய கடவுளை ஒப்பிட முடியுமா?  நமது சுபாவங்களைக் கடவுள் நன்கு அறிந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்டக் காலத்துக்குள் நம் ஜெபத்துக்குப் பதில் கிடைக்காவிட்டால் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கத் தொடங்கி விடுகிறோம். சங்கீதம் 77: 6-10 வசனங்களை வாசித்துப் பாருங்கள். ஆசாபின் புலம்பல் இது. உன் பார்வையில் உன் செபத்துக்கு உடனே பதில் கொடுக்காத கடவுள் ஒரு கடின இதயமுள்ள நியாயதிபதியைப் போல் தோன்றலாம், பாதகமில்லை, தொடர்ந்து ஜெபி, நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது. (நீதி.23:18). வேதத்தில் நாம் காணும் யாவருமே நம்மைப்போலப் பாடுள்ள மனுஷர்கள் தான். ஆனாலும் அவர்கள் ஜெபித்த போது கர்த்தர் அவர்கள் ஜெபத்தைக் கேட்டார். (யாக்.5:17) நாமும் நமது ஜெபவேளையை அர்த்தமுள்ளதாக்கும் பொருட்டு, கண்ணீரோடும், காத்திருந்தும், கருத்தோடும் ஜெபிக்கிறபோது ஏற்றகாலத்தில் யாவையும் நேர்த்தியாகச் செய்து முடிக்கும் கடவுள் நமது ஜெபத்துக்கு நிச்சயம் பதில் கொடுப்பார்.