Monday 30 November 2015





இறை வருகையில் மகிழ்ச்சி

வேத பாடங்கள்:

1.  சங்.133, (2) 1கொரி 12: 12-20, (3) தூய லூக்கா 1: 30-56

கடவுளின் வருகைக்காக முன்னெப்போதையும்விட மிக ஆவலுடன்,ஏக்கத்துடன் நாம் காத்திருக்கும் இந்த நாட்களின் தொடக்கத்திலே ஆண்டவரின் வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

தூய லூக்காவின் நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்ட சம்பவங்களின் படியே, காபிரியேல் தூதன் மரியாளை வாழ்த்திவிட்டு போனபின், அவர் மனதில் ஏராளமான கேள்விகள் எழும்பியிருக்கக் கூடும். தூதன் சொன்ன செய்தியை யாரிடம் பகிர்ந்து கொள்வது? யார் அவரை நம்புவார்கள்?  யார் அவரைப் புரிந்து கொள்வார்கள்? மனதில் துழாவிப் பார்த்தபோது ஒருவரும் காணக்கிடைக்கவில்லை.  நல்லவேளையாக, தூதன் எலிசபெத்தைப் பற்றி சொல்லிச் சென்றிருந்தார். அந்த அம்மையாரைவிடச் சிறந்த நபர் வேறெவரும் இருக்க முடியாது.  இருவருமே கருவுற்றிருந்தார்கள்.  இருவருமே குழப்பமும் சஞ்சலமும் அடைந்திருந்தார்கள். எனவே,மரியாள் எலிசபெத்தைக் காண விரைந்தார்.  இந்த மொழியாக்கத்தில் ‘தீவிரமாய்’ என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் spoude என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விரைவு, முதல் பரிசு பெற விழையும் ஓட்டப் பந்தய வீரனின் விரைவு அல்ல, தாயை  நோக்கி ஓடிவரும் குழந்தையின் ஆர்வம்,அன்பு,உற்சாகம் கலந்த விரைவு.  மிஞ்சினால் 17 அல்லது 18 வயதே உடைய அந்த இள நங்கைக்கு ஒரு குழந்தைக்குத் தாயாவது குறித்தும், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்தும் எவ்வளவோ கேள்விகள் இருந்திருந்திருக்கும். இவை யாவுக்கும் சரியான ஆலோசகராக, உற்ற துணையாக மரியாள் எலிசபெத்தையே நம்பினார்.

லூக்கா 1:39 ல் கூறப்பட்டுள்ளபடி, எலிசபெத்தின் ஊர் மலை நாட்டிலே, யூதாவில் உள்ள ஒரு பட்டணமாயிருந்தது. மரியாளின் ஊரான நாசரேத்திலிருந்து 80 அல்லது 100 மைல் தூரமுள்ள அந்தப் பட்டணத்துக்குப் போய்ச் சேர மரியாளுக்கு மூன்று, நான்கு நாட்களாகியிருந்திருக்கும். வீட்டுக்குள்   நுழைந்த உடனேயே எலிசபெத்தை வாழ்த்துகிறார்.  (வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, ஆசீர்வதிக்கத்தான் வயது தேவை)  இந்த வாழ்த்தைக் குறிக்க Aspazomai  என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.  தமிழர் வணக்கம் கூறிக்கொள்வது போல, யூதர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம்.  வாசிக்க. 10:5.  ‘இந்த வீட்டுக்கு சமாதானம் உண்டாவதாக’ என்னும் வாழ்த்து அவ்வளவு வல்லமை உடையதாம்.  வாழ்த்தைக் கேட்டவுடனேயே, எலிசபெத் வயிற்றிலிருந்த குழந்தை துள்ளுகிறது, அவரும் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்.  ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக’ (3:3) வரவிருக்கும் யோவன் ஸ்னானகன் தன் தாயின் வயிற்றிலிருந்தபடியே மரியாளின் வயிற்றிலிருக்கும் மெசியாவுக்கு நல்வரவு கூறுவதைப் போலிருந்தது அந்தத் துள்ளல்.

வ.42. உரத்த சத்தமாய்:  ‘Shriek or squeal’ என்ற பதங்களை இதற்கு பயன்படுத்தலாம்.  நாம் மிகவும் நேசிக்கிற ஒருவரை, ‘நான் இப்போதிருக்கும் நிலையில் அவர் இருந்தால் நன்றாயிருக்குமே’ என்று நமது மனம் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை, சற்றும் எதிர்பாராத நிலையில் சந்திக்கும்போது கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படும் அல்லவா?  அந்த நிலையில்தான் எலிசபெத்தும் இருந்தார்.  வசனங்கள் 7, 24,25 ஆகையவற்றை வாசியுங்கள். ஆபிரகாம் தன் மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பேரிட்டாரே, ஈசாக்கு என்றால் ‘நகைப்பு’ என்று பொருள்.  வயதான காலத்தில் கர்ப்பவதியாயிருந்த எலிசபெத்தும்  ஊரார் கேலி செய்வார்களே என்று எங்கும் வெளியில் கிளம்பாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்.  பேசுவதற்குக்கூட ஆள் கிடையாது.  கணவரான சக்கரியாவும் தமது அவிசுவாசத்தின் காரணமாக தற்காலிகமாக ஊமையாக இருந்தார். மனிதர் குரலைக் கேட்டே வெகு நாட்களாகி விட்டிருந்த எலிசபெத்துக்கு மரியாளைக் கண்டதும்  உற்சாகம் கரை புரண்டோடியது.  தூய ஆவியின் அபிஷேகம் வேறு அவரை ஆர்ப்பரித்துப் பொங்கும் கடலைப் போலாக்கிவிட்டது. மரியாள் தன்னிலை பற்றிக் கூறுமுன்பே அவரை ‘என் ஆண்டவருடைய தாயார்’ என்கிறார். மரியாளின் வாழ்த்துக்கு மறுமொழியாக இரண்டு வாழ்த்துக்களை அளிக்கிறார்.  ஒன்று, மரியாளை ‘பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்.  இன்னொன்று, மரியாளின் கர்ப்பத்திலிருக்கும் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது’ என்கிறார்.  அவிசுவாசத்தினால்  ஊமையாகிப்போன கணவனை உடைய அந்தப் பெண்மணி, மரியாளின் விசுவாசத்தின் நிமித்தம் அவரை ‘பாக்கியவதி’ என்கிறார்.

மரியாளின் பதிலுரை சங்கீதப் புத்தகத்தின் ஒரு சிறிய தொகுப்பு போலாகிறது.  1 சாமுவேல் 2:1ல் நாம் வாசிக்கிற அன்னாளின் வாழ்த்தொலியும், மரியாளின் வாழ்த்தொலியும் இணைந்து ஒலிக்கின்றன.  மரியாளும் எலிசபெத்தும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ  ஆறுதாலாயிருந்திருப்பார்கள்.  தூதனின் வாழ்த்துக்குப் பணிந்து, ‘இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை’ என்று தன்னை ஒப்புக் கொடுத்திருந்த அவரது மனதில் எத்தனையோ விடை காண முடியாத கேள்விகள் எழும்பியிருக்கும். யோசேப்புக்கு என்ன பதில் சொல்வது?  உற்றார் உறவினரால் வரும் நிந்தையையும் உபாகமம் 22 : 23 – 27-ன்படியான மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் எப்படி எதிர் கொள்வது?  இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பது? போன்ற கேள்விகளுக்கு அனுபவமும், அக்கறையும் உள்ள, கடவுளின் சித்தத்தின்படி ஆலோசனை வழங்க எலிசபெத்தைவிட மிகச் சிறந்தவர் யாரிருக்க முடியும்?  கடவுளின் அழைப்பு நமக்கு ஆசீர்வாதத்தை மட்டுமல்ல, பாடுகளையும் கொண்டு வருகின்றன அல்லவா?  (அப். 9:15,16)

மரியாளுக்கு எலிசபெத்தும், எலிசபெத்துக்கு மரியாளும் எவ்வளவாய்த் தேறுதலாயிருந்தார்களோ, அது போலவே நாமும் இருக்கத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  இத்தனைக்கும் எலிசபெத்து தனிமையாயிருக்கவில்லை.  பேச இயலாதவராக இருந்தாலும் அன்பான கணவர் கூடவே இருந்தார்.  இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு பெண் துணை போலாகுமா? என் முகம் சற்று சோர்ந்து போனால் என்னை ஏந்திக் கொள்ள அன்பான குடும்பம் உண்டு.  ஆனாலும், ஊழியக்காரர் சொல்கிற ஒரு அன்பான் வார்த்தை, சக விசுவாசி கூறும் ஊக்கமூட்டும் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதல்!.

நானும் போதகன்தான், ஆசிரியன்தான்.  இரண்டுக்குமே Teacher என்பதுதான் ஆங்கிலப்பதம்.  பிறருக்காக ஜெபிக்கிறேன், கடவுளின் கிருபையால் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கிறேன். ஆனால் எனக்குக் கூட

‘யாரும் இல்லைக் காப்பாற்றிட, தோளில் சாய்த்து என்னைத் தேற்றிட’

என சில நேரங்களில் பாடத்தோன்றுகின்றது.  லூக்கா 9:58ல்,  நமது ஆண்டவர் ‘மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’ என்றாரே, அது வெறும் பாயும் தலையணையும் தான் என்று எண்ணுகிறீர்களா?  இயற்கையிலேயே மனிதன் ஒரு சமுக விலங்காயிருக்கிறான். சக மனிதர் உதவி இல்லாமல் அவனால் வாழ முடியாது.  கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  (சங்.133, பிர.4: 9-12)  நல்ல வேளையாக நமதாண்டவர் ‘திருவிருந்து’ என்னும் சாக்கிரமெந்தை ஏற்படுத்தினார்.  அதன் அர்த்தமே ஐக்கியத்தில் நிலைத்திருப்பதுதான்.

ஒரு மனிதர் ‘சபைக்கு வந்துதான் கடவுளைத்தொழ வேண்டுமென்பதில்லை. நான் வீட்டிலேயே ஜெபிப்பேன். சபை கூடி வருதல் எனக்கு அனாவசியம்’ என்று கூறிக்கொண்டு ஆலயத்துக்கு வராதிருந்தார்.  போதகர் அவரது வீட்டுக்கு ஓரிரவு வேளையில் போனார். குளிர் காலமாக இருந்தபடியால் இருவரும் கணப்பருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போதகர் எழுந்து எரிந்துக் கொண்டிருந்த விறகுகளில் இருந்து ஒரு விறகை எடுத்து தனியே வைத்தார்.  கொஞ்ச நேரம் எரிந்த விறகு விரைவிலேயே அணைந்து போயிற்று.  போதகர் எதுவும் கூறாமலே இதன் பொருளைப் புரிந்து கொண்ட அந்த மனிதர், “ஐயா, நாளை முதல் நான் ஆலயத்துக்கு வந்து விடுகிறேன்’ என்றார்.  நாம் கிறிஸ்துவின் அவயவங்களாயிருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் மிகவும் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம்.  இதை உணர்ந்து கொண்டு கிறிஸ்துவின் அன்பில், ஐக்கியத்தில் நடந்து கொள்ள கடவுள் நமக்கு அருள் செய்வாராக.




பொறுமை அருளும் சமாதானம்
ரோமர் 15 : 1-7

ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலாத்தியர் 5:22 ல் குறிப்பிட்டுள்ளபடி, நீடிய பொறுமை என்பது ஆவிக்குரிய கனிகளில் ஒன்றாகும். யோவான் 15-ம் அதிகாரத்தை நாம் படிக்கும்பொழுது நாம் கனி கொடுக்க வேண்டுமென்றே கடவுள் நம்மைத் தெரிந்துக் கொண்டிருக்கிறார், ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

கீழ்க்காணும் தலைப்புகளில் நாம் தியானிக்கப் போகும் காரியங்கள் பொறுமை என்னும் கனியின் இனிமையை நமக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

1. மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்:

நாம் நன்றாய் அறிந்திருக்கிறபடியே, நமது வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் நம் விருப்பத்தின்படி மாற்றி விட முடிவதில்லை.  நமது விழைவுகளை   நிறைவேற்றிக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சிகள் தேவ சித்தத்துடன் ஒத்துப் போனால் நிறைவேறுகிறது.  இல்லையேல் இல்லை. ஜெயித்து விட்டால் ‘என் புத்தி, யுக்தியால் ஜெயித்தேன்’ என்று சொல்லி இறுதியாக போனால் போகிறது என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். காரியம் பலிக்காவிட்டால், அப்பொழுது நமது செயல் திறமின்மையை மறந்துவிட்டு, கடவுளிடம் குறைபட்டுக் கொள்கிறோம். நாம் காரிய சமர்த்து உடையர்வர்களாக இருக்கக்கூடும் ஆனால் காரிய சித்தி கர்த்தரால் வருகிறது. ‘ஒன்றை ஆக்குதல், மாற்றுதல், அழித்தல் இவையெல்லாம் நம் செயலல்ல’ என்பதை உணர்தலே முதிர்ச்சியின் அடையாளம்.  நம்மால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு பொறுமை மிகவும் அவசியமாகிறது.

தூத்துக்குடி முத்துக் குளித்தல் தொழிலுக்கு பேர் போனது. முத்து எப்படி உருவாகிறது தெரியுமா? முத்துச்சிப்பிக்குள் ஒரே ஒரு மணல் துகள் நுழைந்துவிடும். நம் கண்ணில் மணல் விழுந்தால் எப்படி கரிக்குமோ அப்படிதான் சிப்பிக்கும் வேதனை.  ஆனால், அப்படியே பொறுமையாக இருந்து, ஒரு விதமான திரவத்தை சுரக்கச்செய்து அந்த மணல் துகளை மூடுகிறது. அதுவே பிறகு விலையுயர்ந்த முத்தாகிறது.  (யாக்கோபு 1:2-4)

2.  தடைக்கற்களைப் படிக்கற்களாக்குங்கள்:

நரகத்துக்குப் போகிற ஆட்களின் பட்டியலில் முதலாவதாக வருபவர்கள் பயப்படுபவர்கள்தான்.  (வெளி.21:8)  பூரண அன்பு பயத்தை புறம்பேத் தள்ளுகிறது.  படகில் தூங்கிக் கொண்டிருந்த இயேசுவை எழுப்பிய சீடர்களை நோக்கி ‘ஏன் பயந்தீர்கள்’ எனக் கேட்டார் அல்லவா? பயம் என்கிற என்ற வார்த்தைக்கு அவர் பிரயோகம் செய்த சொல் மிகவும் கடுமையானது என வேத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பிரச்சினை அல்லது போராட்டம் வந்தால் மன தைரியத்துடன் அதை எதிர் கொள்ள வேண்டும். ‘என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே எதையும் செய்ய எனக்கு திராணி உண்டு என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.  வேதத்தில் நாம் காண்கின்ற தேவ மனிதர்களெல்லாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல, செயல் வீரர்கள்.  ஆகவே, நாமும் நம் வாழ்வில் எதிர்ப்படுகிற சோதனைகளை கிறிஸ்துவின் துணையோடு எதிர்கொண்டு ஜெயம் பெற வேண்டும்.


3. பொறுமையை அணிகலனாக அணிந்துக் கொள்ளுங்கள்:

‘உறையும்வரைக் காத்திருந்தால் சல்லடையில் கூடத் தண்ணீரை அள்ளலாம்’ என்பார்கள்.  ஆனால், நமது ஜெபம் எப்படி இருக்கிறது? ‘கடவுளே, எனக்குப் பொறுமையைத் தாரும், இப்பவே தாரும்’!  அதுவும் இந்த அவசர யுகத்தில் எதற்கும் யாருக்கும் பொறுமையில்லை. யோபுவின் பொறுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற யாக்கோபு, பொறுமையைக் குறித்து விஸ்தாரமாக எழுதுவதை 5: 7-11 வசனங்களில் பார்க்கிறோம்.  சங்கீதம் 40:1 –ல் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்த தாவீதுக்குக் கிடைத்த நன்மையைப் பார்க்கிறோம்.  நாம் பொறுமையிழக்கும் சந்தர்ப்பங்களை சற்று கவனித்துப் பார்த்தால், எப்போதெல்லாம் நமது ஈகோ பாதிக்கப் படுகிறதோ, எப்போதெல்லாம் நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டியது மறுக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் நமது பொறுமை காணாமல் போய்விடுகிறது.  கடவுளுக்கு ஏற்ற காலத்தில் நேர்த்தியாக செய்து முடிக்கும் தேவன் என்று ஒரு பெயர் இருக்கிறது. (பிர. 3:11) அவர் நமக்குத் தர நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது. எனவே, ஏற்ற காலத்தில் நமது தேவனாகிய கர்த்தர் நம்மை உயர்த்தும் வரையில் அவரது பலத்த கரத்துக்குள் அடங்கியிருப்போம். கர்த்தர் சீக்கிரமாகவே நமக்கு நியாயம் செய்வார்.

Sunday 8 November 2015

You are the light of the world

Dear viewers,

இன்று 'நீங்கள்   இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் ' என்ற  தலைப்பில் அருளுரை ஆற்ற கடவுள் கிருபை செய்தார். தலைப்பு  எளிமையானது போலத் தோன்றினாலும் தயார் செய்வதற்குள் பிராணன் போய் விட்டது . ப்ளாகில் கமெண்ட் செய்வது கடினம் தான். எனவே,face book சென்று எனக்கு message வழியாக உங்கள் விமர்சனங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .
நன்றி

உலகத்தின் வெளிச்சம் நீங்கள்
வேத பாடங்கள்:  (1`)  சகரியா 4:1-14,  (2) 1கொரி.3:10-15,  (3) மத்.5:14-16
இவ்வுலகத்துக்கு ஒளியாய் வந்த அருள் நாதர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  வேதாகமத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உருவகம் வெளிச்சம்.  அறிவு வெளிச்சமென்றால், அறியாமை இருளாகும்.  இங்கே வெளிச்சம் என்பதன் பொருள் ‘இயேசுவை அறிந்துக் கொள்ள உலகுக்கு வழங்கப்படும் வாய்ப்பு’ என்பதாகும்.  கடவுளைக் குறித்த அறிவைப் பொறுத்த வரையில் உலகம் இன்னும் இருளில்தான் இருக்கிறது.  அவ்விருளை நீக்கி, கடவுளை நோக்கி வழி நடத்தும் வெளிச்சமாயிருப்பதே நமக்குக் கொடுக்கப் பட்டுள்ள அழைப்பு. 
  நாம் இவ்வுலகத்திற்கு வெளிச்சமாக இருப்பதன் வாயிலாக  இயேசு எந்த நோக்கத்துக்காக இவ்வுலகத்துக்கு வந்தாரோ அந்த நோக்கத்தை நிறைவு செய்கிறோம்.  யோவான் 1:9, 8;12,  12;46
ஒளி வீசி எரிய வேண்டிய விளக்கு மறைத்து வைக்கப் பட்டால், எதற்காக அது ஏற்றப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.  நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்ற ஆண்டவர், உடனேயே, ‘மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது என்கிறார்.  இயேசுவின் நாட்களில் கட்டப்பட்டப் பட்டணங்களெல்லாம் மலைகளின்மேல் கட்டப்பட்டவையே.  பல மைல் தூரத்திலிருந்தும் அவற்றைப் பார்க்கலாம்.  இயேசுவை ஒருவன் ‘நல்ல போதகர்’ என்றதில் அர்த்தமில்லாமல் இல்லை.  தாம் வாழ்ந்த நாட்டில், ஊரில் மக்கள் எவற்றைக் கண்டு வந்தனரோ, எவையெல்லாம் அவர்களுக்கு மிக அறிமுகமானவையோ, அவற்றை உதாரணங்களாகக்  கொண்டே அவர் அவர்களுக்குப் போதித்து வந்தார்.  சுளகு, உப்பு, விளக்கு, ஆடு, திராட்சை செடி, சீசரின் நாணயம் ஆகிய இவையெல்லாம் அவருடைய teaching aids!  மத்தேயு 5:15 ல் அவர் பயன்படுத்தும் மரக்காலும் யாவருக்கும் நன்றாக அறிமுகமானப் பொருள்தான்.  எரிந்து பிரகாசிக்க அழைக்கப் பட்டவர்கள் மரக்காலுக்குள் மறைந்து கொள்வது அபத்தமாயிருக்குமே.
இப்போது காலம் இருக்கிற இருப்பில் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதற்கே பயமாகத்தானிருக்கிறது. ஆனால், நமக்கு முன் இந்த விசுவாசப் பாதையில் நடந்து சென்றவர்கள்  நம்மைவிட மிக அதிகமான நெருக்கங்கள் மத்தியிலும் எரிந்து பிரகாசித்திருக்கிறார்கள். ‘ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு, உலகத்திலே  சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றப் பிள்ளைகளுமாயிருக்க வேண்டுமென பவுலடியார்  எழுதுகிறார். (பிலிப்.2:14-15) நமக்கும் நமதாண்டவருக்கும் உள்ள ஐக்கியத்தை உலகம் அறியாவிட்டல், நாம் இங்கே இருப்பதன் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடும்.  (மத். 5:16)  நமது நற்கிரியைகளைக் கண்டு பிறர் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். மார்டின் தே போரஸ் என்னும் ஒரு புனிதரின் நற்பண்புகளைக் கண்ட ஒருவர், ‘இவரே இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே, இவர் ஆராதிக்கும் இயேசு எவ்வளவு நல்லவராயிருப்பார்’ என்று சொல்லி தம் வாழ்வை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தாரம்.  ‘என்னைக் காண்போர் உம்மைக் காண உமது சாயல் என்னில் வேண்டும்’ என்பதே நமது வேண்டுதலாயிருக்க வேண்டும்.
செய்ய வேண்டியவை என்ன?
வீட்டிலும், ஊரிலும் செல்லுமிடமெங்கும் வெளிச்சம் வீசுபவர்களாக இருக்க வேண்டும். 15 –ம் வசனத்தின் பிற்பகுதியை மீண்டும் படியுங்கள்:  முதலில் வீட்டில் உள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்க வேண்டும்.  மகாத்மாக்களோடு சொர்க்கத்தில் வேண்டுமானால் இருக்கலாம், ஒரே வீட்டில் குடித்தனம் செய்ய முடியாது’ என்று சொல்வார்கள். மிஞ்சின நீதிமானாயிராதே என்றுதான் வேதமும் சொல்கிறது.  ஒரு சராசரி மனிதனாக  நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பில் உண்மையும் உத்தமமாயும் நடக்கும்பொழுது  நம் வீட்டார்  நம் வெளிச்சத்தில் வெளிச்சம் காண்பார்கள். அதேபோல்தான் பணித்தளத்திலும், சமுதாயத்திலும் எளிய, இனிய சாட்சியான வாழ்க்கையால் பிறரை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம்.  உலகத்துக்கு ஒத்த வேஷமும் தரிக்கக்கூடாது, உலகத்தைவிட்டு நம்மை தனிமைப் படுத்திக் கொள்ளவும் கூடாது. இவ்வளவு நெறி பிறழ்ந்த உலகில் இவரால் செம்மையாக வாழமுடிகிறது என்றால் நாமும் ஏன் இவர் ஆராதிக்கும் இயேசுவை ஏற்றுக் கொண்டு இவரைப்போல் வாழக்கூடாது என்ற தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் எரிந்து பிரகாசித்தல் என்பது.
புறவினத்தினர் நடத்திய பள்ளி ஒன்றில் கிறிஸ்துவராகிய ஆசிரியர் ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்தார். நீங்கள் எவரிடமும் உங்கள் மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு வேலை அளிக்கப்பட்டது. அவரும் இயேசுவைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.  ஆனால், அவர் வாழ்க்கையைப் பார்த்து அனேகர் இயேசுவை தம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.  உன் கதை என்ன என்று ஒருவேளை நீங்கள் கேட்கக்கூடும். பள்ளியில் நடக்கும் அக்கப்போர் எதுவும் என் காதுக்கு வராது.  ஆனால், நண்பர்களின் குடும்ப மற்றும் அந்தரங்கமான பிரச்சினைகளுக்கு என் ஆலோசனைகளையும், உதவியையும், ஜெபத்தால் தாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் என்னிடம் கொண்டு வருகிறார்கள்.
உலகத்துக்கு உப்பாக இருங்கள் என்ற ஆண்டவர் அடுத்ததாக ஒளியாக இருங்கள் என்று கூறுகிறார்.  உப்பு உணவில் கலந்து கரைந்து மறைந்து விடுகிறது. சுவையூட்டுகிறது; உணவு கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது.  ஆனால்,ஒளியின் செயல்பாடுகள் வெளிப்படையானவை.  ‘அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.(சங்.19:6) 
இருட்டில் மறைந்து கொள்ளுதல்:
இருட்டிலிருப்பது வேறு, இருட்டில் மறைந்து கொள்வது வேறு. யோவான் 3: 19-21 வசனங்களில் இத்தகையவர்களைப்பற்றி இயேசு குறிப்பிடுகிறார்.  இருள் என்பது இயற்கையான ஒன்றுதான்.  ஆனால், கடவுள் வெளிச்சத்தை உண்டாக்கினார், அது நல்லது என்றும் கண்டார். (ஆதி. 1:2-4) நல்லோர் தீயோரின் வாழ்க்கைப் பாதைகளை ஒப்பிட்டுப்பார்க்கும் ஞானி, நடுப்பகலில் ஒளிரும் கதிரவனையும், காரிருளையும் உவமைகள் ஆக்குகிறார்.  (நீதி. 4:18,19) “உங்கள் இறை நம்பிக்கையை மெச்சுகிறோம். அதே வேளையில் எங்களுக்கு நலமாகத் தோன்றுவதை பின்பற்றுகிறோம்’ என்று அறிவார்ந்த பதில் கூறிவிட்டு இருட்டுக்குள் தங்களை முக்காடிட்டு மறைத்துக் கொள்பவர்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
இத்தகையச் சூழலில்தான் இயேசு நம்மை நோக்கி, “நீங்கள் இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்” என்கிறார்..  யோவான் 9:5-ல் தம்மை இவ்வுலகத்திற்கு ஒளியாயிருப்பதாகக் கூறியவர், இப்பொழுது அதே வார்த்தைகளை நம்மை நோக்கிக் கூறுகிறார்.  ஆண்டவர் நம்மை பலவாறாக பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்: ஆடுகள், திராட்சை கொடிகள், சினேகிதர்கள்,... எல்லாமே சிலாக்கியமானவைதான்.  தம்மைக் குறிப்பிட்டுச் சொன்ன அதே உருவகத்தால் நம்மையும் அழைப்பது இன்னும் மேலான சிலாக்கியம் என்றே கருதுகிறேன்.  அதே வார்த்தையை ஒரு வேளை ஆண்டவர் சொல்லாமல் நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம் என வைத்துக் கொள்வோம். எப்படி இருக்கும்? மேட்டிமையின் உச்சமே அதுவாகத்தானிருக்க முடியும்.  எபேசியர் 5:8-ல் பவுல் எழுதுகிற இந்த வார்த்தைகளைப் பாருங்கள்: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள்.  அந்தகாரத்தில் இருந்தீர்கள் என்று எழுதவில்லை, அந்தகாரமாகவே இருந்ததாக எழுதுகிறார்.  அதே போல் இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்கிறார். வெளிச்சத்தில் இருப்பவர்கள் அல்ல, வெளிச்சமாகவே இருப்பவர்கள்!
ஒரு கண்ணடி தன்முன் வந்து நிற்பவரை அப்படியே பிரதிபலிக்கிறது. அது போலவே விளக்கும் அது இருக்கும் இடத்தில் இருக்கிற யாரையும், எதையும் இருக்கிறவண்ணமாகவே காட்டுகிறது. ஒளி வாழ்வின் ஆதாரமாக இருக்கிறது.  நமது, பேச்சு, செயல்கள், வாழ்க்கைமுறை யாவுமே நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும்.
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடும் பழக்கம் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது.  ‘ஐயோ, இல்லையே’ என்கிறீர்களா? பலவகையான மரக்கால்கள் இருக்கின்றன. ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்:
1. கோழழைத்தனம் என்ற மரக்கால்: யோவான் 19:38-ல் நாம் காண்கிற யோசேப்பு இந்தவகையைச் சேர்ந்தவர். அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது.  ஆனால், ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.
2.  நிர்விசாரம்:  யார் என்ன ஆனால் என்ன? எங்கே எது நடந்தால் என்ன?  நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று யோசுவாவின் விசுவாசப் பிரகடனத்துக்கு, அவர் கனவிலும் எண்ணியிராத புதிய பொழிப்புரையை எழுதுபவர்கள் இவர்கள். செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் காணும் எந்த செய்தியும் இவர்களது ஜெபக்குறிப்பாக மாறுவதே இல்லை. தேசத்துக்காக, மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபம் செய்து அறியாதவர்கள்.
3.  கிறிஸ்தவர்கள் அடக்கமானவர்கள் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள்:  அடக்கமானவர்கள்தான், ‘அடக்கம்’ செய்யப்பட்டவர்கள் அல்ல. சோதோம், கொமோராவில் குடி புகுந்த லோத்து, அந்த மக்களின் வாழ்வு முறையைக் கண்டு, ஒன்று ஓடி வந்திருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் அவர்களது அக்கிரமச் செய்கைக் குறித்து கண்டித்து உணர்த்தியிருந்திருக்க வேண்டும்.
மாற்கு 7:24-ல் ஒரு சுவரஸ்யமான விஷயம் இருக்கிறது பாருங்கள். அவர் தம்மை மறைத்துக் கொள்ள விரும்பியும் கூடாமற்போயிற்றாம்.  ஏனெனில், அவர் பூமியில் இருந்த நாட்களில் நடுப்பகலில் நாம் காணுகின்ற சூரியனைப் போலிருந்தார். அவரைப் போல பிரகாசிக்கவே நாமும் அழைக்கப்படுகிறோம்.
முடிவுரை:
தியாகத்தின் அடையாளமாக மெழுகுவர்த்தியைக் குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மெழுகுவர்த்தியைப் போன்றவர் யோவான் ஸ்நானகன். ‘அவர் பெருக வேண்டும், நான் சிறுக வேண்டும்’ என்று சொல்லி தம்மை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து நமக்கும் நல்ல முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிற அவரைப் போலவே, நாமும் இவ்வுலகில் ஒளிவீச இறைவன் தயை செய்வாராக.
  

Thursday 8 October 2015



Praise the Lord

இறை வேண்டுதலில் உறுதியுடன் நிலைத்திருத்தல்

வேதபாடங்கள்

(1)   2 இராஜக்கள் 20:1-11,  (2)  1 தெச. 5:12-28, (3) மாற்கு 7:24-30

அருள்நாதர் இயேசுவின் இனிய திருப்பெயரால் உங்கள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நாம் தியானிக்க வேண்டிய கருப்பொருள் ‘இறைவேண்டுதலில் உறுதியுடன் நிலைத்திருத்தல்’ என்பதாகும். சிந்தனையைத் தூண்டும் பாடலொன்றின் அழகான சரணமிது:

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்.

ஜெபம் என்பது கடவுளோடு நாம் செய்யும் உரையாடல். நாம் யாரிடம் மிகவும் அன்பாக இருக்கிறோமோ அவர்களோடு பேசும்போது நேரம் போவதேத் தெரிவதில்லை அல்லவா? அதுபோல் தான் கடவுளும் நமது உற்ற நண்பராக, தந்தையாக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருக்கிறார். அதிலும் ஜீவனுள்ள மெய்யான கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ள நமக்கு, கோவில் குளத்துக்குப் போய்தான் அல்லது ஒரு சிலையின் முன் பணிந்துதான் கடவுளோடு உரையாட, உறவாட வேண்டும் என்ற அவசியமில்லை.  உண்மையாக நாம் பாக்கியம் பெற்றவர்கள்தாம். திருமறையும் அப்படித்தான் கூறுகிறது:
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது’- சங்.144:15.

ஒருமுறை ஒரு பெண் ஆயரில்லத்துக்கு ஓடி வந்து, “அய்யா, என் தந்தை மிகவும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். தாங்கள் வந்து அவருக்காக ஜெபம் செய்ய வேண்டும்” என்றாள். ஆயரும் உடனே அந்த மனிதரின் வீட்டுக்குச் சென்றார். அந்த மனிதர் படுத்திருந்த கட்டிலின் அருகே ஒரு நாற்காலியும் இருந்தது. “நான் வருவேன் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா? நாற்காலியெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்களே’? என்று கேட்ட அய்யரை ஒருவித சங்கடத்துடன் நோக்கிய அந்த மனிதர், “இல்லீங்க அய்யா, வேதமெல்லாம் வாசிப்பேன், கோவிலுக்கு தவறாமல் போவேன். ஆனால் ஜெபிக்க மட்டும் தெரியாது. என் நண்பன் முத்துவிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவன் சொன்னான், “என்மீது மிகவும் அன்பும் நட்பும் இருப்பதால்தானே நேரம் போவது தெரியாமல் என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறாய். அதுபோல்தான் ஆண்டவருடன் பேசுவதும். வேண்டுமானால் நான் உட்கார்ந்திருக்கும் இந்த நாற்காலி காலியாக இருக்கும்போது அதில் இயேசு அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொண்டு மனதிற்குள் அவருடன் பேசு” என்றான். இப்பொது அதுவே எனக்குப் பழக்கமாகி விட்டது” என்றார். ஆயர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். உருக்கமாக அந்த மனிதருக்காக ஜெபித்துவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பெண் வந்து தன் தந்தை இறந்துவிட்டதாகக் கூறினாள். ஆயரும் அந்தப் பெண்ணும் போய்க்கொண்டிருக்கும்போது அந்தப்பெண் கூறினாள், “அய்யா, என் தந்தையின் மரணம் மிகவும் அமைதியாக அமைந்தது, ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவில்லை.  படுக்கையை விட்டுத் திரும்பி என்தந்தையின் தலை அருகில் இருந்த நாற்காலியின்மீது இருந்தது. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றாள். ஆயர் அந்த மனிதர் இயேசுவின் மடியில் உயிர்நீத்திருக்கிறாரென்று புரிந்துக்கொண்டார். ஆக, ஜெபம் என்பது கடவுளோடு நாம் கொள்ளும் ஆத்மார்த்தமான உறவு என்றாகிறது.
இந்த அருளுரையை, கண்ணீருடன் ஜெபித்தல், காத்திருந்து ஜெபித்தல் மற்றும் கருத்தோடு ஜெபித்தல் என்று மூன்று தலைப்புகளில் தியானிப்போம்.

கண்ணீருடன் ஜெபித்தல்:

நாம் முதலாம் வேதபாடத்தில் வாசிக்கக் கேட்ட எசேக்கியா, தன்மரணம் முன்னறிவிக்கப்பட்டபோது மிகவும் அழுதார் என்று பார்க்கிறோம். மனிதனின் மகத்தான பயங்களில் மரணபயமுமொன்று. எவ்வளவு முதுமை, இயலாமை இருந்தாலும் மரணத்தின் நிச்சயமற்ற தன்மை நமக்கு அச்சமூட்டுவதாகத்தானிருக்கிறது.  தள்ளாத முதுமையிலும் விறகு பொறுக்கி வயிறு வளர்க்க வேண்டியிருந்த ஒரு பெண்மணி, ஏய், எமனே, நீ வரமட்டாயா? என்றாளாம். எமன் உடனே வந்து ‘என்ன வேண்டும்’? என்றுக் கேட்டானாம். திகைத்துப்போன அந்தப் பாட்டி, “ஒன்னுமில்லே, இந்த விறகுக்கட்ட கொஞ்சம் தூக்கி விடேன்” என்றாளாம். சங்கீதக்காரனின் அனுபவம் வேறாக இருந்தது.“   “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” என்றாரவர். ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய அனுபவம் வேறாக இருப்பதால் கடவுள் நம் அவிசுவாசத்தை, அச்சத்தைக் கண்டு சினம் கொள்வதில்லை. வளர்ந்த, ஒரு நாட்டுக்கே அதிபதியான அந்த ‘ராஜக்குழந்தைக்கு’ கடவுளிடமிருந்து வந்த பதில் நம்மை மலைக்க வைக்கிறது:  “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்”.  ஆம், அவர் காண்கிறவராக, கேட்கிறவராக இருக்கிறார். கைப்பிள்ளையோடு கணவனால் துரத்தி விடப்பட்ட ஆகாரின் அழுகுரல் கேட்டு பாலை நிலத்தில் தண்ணீர் ஓடிவரச்செய்த கடவுள் நம் கண்ணீரையும் துடைக்கவல்லவராக இருக்கிறார். நம்முடைய இழப்புகள், தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நினைக்கும்பொழுது வெள்ளம்போல் புரண்டு வரும் கண்ணீர், நமது பாவங்களை நினைத்து வருந்தும்போதும் வந்தால் நன்றாயிருக்கும்.  ஏசாயா 59:2ல் நாம் வாசிக்கிறபடியே நமது பாவங்களே அவர் நமக்கு செவி கொடுக்காதபடிக்கு அவர் முகத்தை நமக்கு மறைக்கிறது.  குறிப்பாக இந்த லெந்து காலத்தில் சற்று நேரமெடுத்து, தனிமையில் அமர்ந்து நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து இறையன்புக்கும் பிறரன்புக்கும் விரோதமாக நமக்குள் கிரியை செய்கிற யாவையும் விட்டொழித்து விட்டால், சங். 65:2-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ கடவுள் நமக்கு பதில் தர வல்லவராயிருக்கிறார்.

காத்திருந்து ஜெபித்தல்:

நாம் வாழும் இந்த யுகம் அவசர யுகமாயிருக்கிறது. ஒரு குழந்தை ஜெபம் செய்வது போன்ற ஒரு வாழ்த்து மடலை என் நண்பன் எனக்கு அனுப்பியிருந்தான். கண்களை இறுக மூடியவாறு அக்குழந்தை மிகத் தீவிரமாக ஜெபிக்கிறது: “கடவுளே, எனக்குப் பொறுமையைத் தாரும், இப்பவே தாரும்” கேட்பது பொறுமையை, ஆனால் அதைக்கூடப் பொறுமையோடு கேட்கும் நிலையில் நாமில்லை.  உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கை, நாம் வாகனங்களை ஓட்டும் விதம், நாம் கலந்துக் கொள்ளும் நல்லது கெட்டது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எல்லாம் ஒரே அவசரம் தான். என்ன படிப்பது, என்ன வேலை, யாரை மணப்பது எதற்குமே உரிய நேரமெடுத்து யோசிப்பதுமில்லை, ஜெபிப்பதுமில்லை, பெரியவர்கள், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைக் கேட்பதுமில்லை. ஜெபித்த ஜெபத்துக்கு உடனே பதில் கிடைக்கவில்லை யென்றால் உடனே கடவுளின்மீது மனத்தாங்கல் அடைகிறோம். ஏசாயாவின் புத்தகம் 40:31 சொல்கிறது: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்”.  சங்கீதக்காரனின் அனுபவமும் அதுவாகவே இருக்கிறது:  “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்”. (சங்.40:1)  நாம் வாசிக்கக் கேட்ட தூய மாற்கு எழுதிய சுவிசேஷத்தில் நாம் காணும் அந்தப் பெண்ணிடம் ஆண்டவர் சற்று கடுமையாகப் பேசுவதாகவேத் தோன்றுகிறது. வசனங்கள் 27, 28-ஆகியவற்றைப் படியுங்கள். அந்தப் பெண் யூதகுலத்தவள் அல்ல, இருப்பினும் அவளது பொறுமையும், பணிவும் அவள் மகளுக்கு விடுதலையை மட்டுமல்ல, அவளிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளும்படியாக வேதத்தில் இடம் பெறும் பாக்கியத்தையும் கொடுத்தது. கர்த்தர் சொல்வதைக் கேளுங்கள்:  “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை”(ஏசா.49:23)



கருத்தாய் ஜெபித்தல்:

தம்முடைய ஜெப அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துக்கொள்ளும் பரிசுத்த பவுல் கூறுகிறார்: “நான் கருத்தோடு விண்ணப்பம் பண்ணுவேன்” (1கொரி. 14:15)  ஏனோதானோ ஜெபங்களும், நமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள ஏறெடுக்கப்படுகிற ஜெபங்களும், வேதத்துக்கு செவி கொடாதவர்களின் ஜெபங்களும் கர்த்தருக்கு அருவருப்புண்டாக்குகின்றன. (நீதி.28:9, யாக்.4:3)  ஆண்டவராகிய இயேசு நமக்கு முன்மாதிரியான ஒர் ஜெபவீரராகத் திகழ்ந்தார். பகல் முழுவதும் ஊழியம், இரவு முழுவதும் ஜெபம்- இதுதான் அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது. 1தெச. 5:17 நம்மை இடைவிடாமல் ஜெபம் செய்ய ஊக்குவிக்கிறது. தூய லூக்காவின் சுவிசேஷம் 18:1-7-ல் அவர் சொல்கிற உவமையில் வருகிற கடின இதயமுள்ள அந்த நியாயதிபதியோடு இரக்கமும், பொறுமையும், நீடியசாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவராகிய கடவுளை ஒப்பிட முடியுமா?  நமது சுபாவங்களைக் கடவுள் நன்கு அறிந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்டக் காலத்துக்குள் நம் ஜெபத்துக்குப் பதில் கிடைக்காவிட்டால் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கத் தொடங்கி விடுகிறோம். சங்கீதம் 77: 6-10 வசனங்களை வாசித்துப் பாருங்கள். ஆசாபின் புலம்பல் இது. உன் பார்வையில் உன் செபத்துக்கு உடனே பதில் கொடுக்காத கடவுள் ஒரு கடின இதயமுள்ள நியாயதிபதியைப் போல் தோன்றலாம், பாதகமில்லை, தொடர்ந்து ஜெபி, நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது. (நீதி.23:18). வேதத்தில் நாம் காணும் யாவருமே நம்மைப்போலப் பாடுள்ள மனுஷர்கள் தான். ஆனாலும் அவர்கள் ஜெபித்த போது கர்த்தர் அவர்கள் ஜெபத்தைக் கேட்டார். (யாக்.5:17) நாமும் நமது ஜெபவேளையை அர்த்தமுள்ளதாக்கும் பொருட்டு, கண்ணீரோடும், காத்திருந்தும், கருத்தோடும் ஜெபிக்கிறபோது ஏற்றகாலத்தில் யாவையும் நேர்த்தியாகச் செய்து முடிக்கும் கடவுள் நமது ஜெபத்துக்கு நிச்சயம் பதில் கொடுப்பார்.