Monday 30 November 2015





இறை வருகையில் மகிழ்ச்சி

வேத பாடங்கள்:

1.  சங்.133, (2) 1கொரி 12: 12-20, (3) தூய லூக்கா 1: 30-56

கடவுளின் வருகைக்காக முன்னெப்போதையும்விட மிக ஆவலுடன்,ஏக்கத்துடன் நாம் காத்திருக்கும் இந்த நாட்களின் தொடக்கத்திலே ஆண்டவரின் வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

தூய லூக்காவின் நற்செய்தியில் நாம் வாசிக்கக் கேட்ட சம்பவங்களின் படியே, காபிரியேல் தூதன் மரியாளை வாழ்த்திவிட்டு போனபின், அவர் மனதில் ஏராளமான கேள்விகள் எழும்பியிருக்கக் கூடும். தூதன் சொன்ன செய்தியை யாரிடம் பகிர்ந்து கொள்வது? யார் அவரை நம்புவார்கள்?  யார் அவரைப் புரிந்து கொள்வார்கள்? மனதில் துழாவிப் பார்த்தபோது ஒருவரும் காணக்கிடைக்கவில்லை.  நல்லவேளையாக, தூதன் எலிசபெத்தைப் பற்றி சொல்லிச் சென்றிருந்தார். அந்த அம்மையாரைவிடச் சிறந்த நபர் வேறெவரும் இருக்க முடியாது.  இருவருமே கருவுற்றிருந்தார்கள்.  இருவருமே குழப்பமும் சஞ்சலமும் அடைந்திருந்தார்கள். எனவே,மரியாள் எலிசபெத்தைக் காண விரைந்தார்.  இந்த மொழியாக்கத்தில் ‘தீவிரமாய்’ என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் spoude என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விரைவு, முதல் பரிசு பெற விழையும் ஓட்டப் பந்தய வீரனின் விரைவு அல்ல, தாயை  நோக்கி ஓடிவரும் குழந்தையின் ஆர்வம்,அன்பு,உற்சாகம் கலந்த விரைவு.  மிஞ்சினால் 17 அல்லது 18 வயதே உடைய அந்த இள நங்கைக்கு ஒரு குழந்தைக்குத் தாயாவது குறித்தும், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்தும் எவ்வளவோ கேள்விகள் இருந்திருந்திருக்கும். இவை யாவுக்கும் சரியான ஆலோசகராக, உற்ற துணையாக மரியாள் எலிசபெத்தையே நம்பினார்.

லூக்கா 1:39 ல் கூறப்பட்டுள்ளபடி, எலிசபெத்தின் ஊர் மலை நாட்டிலே, யூதாவில் உள்ள ஒரு பட்டணமாயிருந்தது. மரியாளின் ஊரான நாசரேத்திலிருந்து 80 அல்லது 100 மைல் தூரமுள்ள அந்தப் பட்டணத்துக்குப் போய்ச் சேர மரியாளுக்கு மூன்று, நான்கு நாட்களாகியிருந்திருக்கும். வீட்டுக்குள்   நுழைந்த உடனேயே எலிசபெத்தை வாழ்த்துகிறார்.  (வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, ஆசீர்வதிக்கத்தான் வயது தேவை)  இந்த வாழ்த்தைக் குறிக்க Aspazomai  என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.  தமிழர் வணக்கம் கூறிக்கொள்வது போல, யூதர்கள் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம்.  வாசிக்க. 10:5.  ‘இந்த வீட்டுக்கு சமாதானம் உண்டாவதாக’ என்னும் வாழ்த்து அவ்வளவு வல்லமை உடையதாம்.  வாழ்த்தைக் கேட்டவுடனேயே, எலிசபெத் வயிற்றிலிருந்த குழந்தை துள்ளுகிறது, அவரும் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்.  ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக’ (3:3) வரவிருக்கும் யோவன் ஸ்னானகன் தன் தாயின் வயிற்றிலிருந்தபடியே மரியாளின் வயிற்றிலிருக்கும் மெசியாவுக்கு நல்வரவு கூறுவதைப் போலிருந்தது அந்தத் துள்ளல்.

வ.42. உரத்த சத்தமாய்:  ‘Shriek or squeal’ என்ற பதங்களை இதற்கு பயன்படுத்தலாம்.  நாம் மிகவும் நேசிக்கிற ஒருவரை, ‘நான் இப்போதிருக்கும் நிலையில் அவர் இருந்தால் நன்றாயிருக்குமே’ என்று நமது மனம் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை, சற்றும் எதிர்பாராத நிலையில் சந்திக்கும்போது கட்டுக்கடங்காத சந்தோஷம் ஏற்படும் அல்லவா?  அந்த நிலையில்தான் எலிசபெத்தும் இருந்தார்.  வசனங்கள் 7, 24,25 ஆகையவற்றை வாசியுங்கள். ஆபிரகாம் தன் மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பேரிட்டாரே, ஈசாக்கு என்றால் ‘நகைப்பு’ என்று பொருள்.  வயதான காலத்தில் கர்ப்பவதியாயிருந்த எலிசபெத்தும்  ஊரார் கேலி செய்வார்களே என்று எங்கும் வெளியில் கிளம்பாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்.  பேசுவதற்குக்கூட ஆள் கிடையாது.  கணவரான சக்கரியாவும் தமது அவிசுவாசத்தின் காரணமாக தற்காலிகமாக ஊமையாக இருந்தார். மனிதர் குரலைக் கேட்டே வெகு நாட்களாகி விட்டிருந்த எலிசபெத்துக்கு மரியாளைக் கண்டதும்  உற்சாகம் கரை புரண்டோடியது.  தூய ஆவியின் அபிஷேகம் வேறு அவரை ஆர்ப்பரித்துப் பொங்கும் கடலைப் போலாக்கிவிட்டது. மரியாள் தன்னிலை பற்றிக் கூறுமுன்பே அவரை ‘என் ஆண்டவருடைய தாயார்’ என்கிறார். மரியாளின் வாழ்த்துக்கு மறுமொழியாக இரண்டு வாழ்த்துக்களை அளிக்கிறார்.  ஒன்று, மரியாளை ‘பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்.  இன்னொன்று, மரியாளின் கர்ப்பத்திலிருக்கும் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது’ என்கிறார்.  அவிசுவாசத்தினால்  ஊமையாகிப்போன கணவனை உடைய அந்தப் பெண்மணி, மரியாளின் விசுவாசத்தின் நிமித்தம் அவரை ‘பாக்கியவதி’ என்கிறார்.

மரியாளின் பதிலுரை சங்கீதப் புத்தகத்தின் ஒரு சிறிய தொகுப்பு போலாகிறது.  1 சாமுவேல் 2:1ல் நாம் வாசிக்கிற அன்னாளின் வாழ்த்தொலியும், மரியாளின் வாழ்த்தொலியும் இணைந்து ஒலிக்கின்றன.  மரியாளும் எலிசபெத்தும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ  ஆறுதாலாயிருந்திருப்பார்கள்.  தூதனின் வாழ்த்துக்குப் பணிந்து, ‘இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை’ என்று தன்னை ஒப்புக் கொடுத்திருந்த அவரது மனதில் எத்தனையோ விடை காண முடியாத கேள்விகள் எழும்பியிருக்கும். யோசேப்புக்கு என்ன பதில் சொல்வது?  உற்றார் உறவினரால் வரும் நிந்தையையும் உபாகமம் 22 : 23 – 27-ன்படியான மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் எப்படி எதிர் கொள்வது?  இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பது? போன்ற கேள்விகளுக்கு அனுபவமும், அக்கறையும் உள்ள, கடவுளின் சித்தத்தின்படி ஆலோசனை வழங்க எலிசபெத்தைவிட மிகச் சிறந்தவர் யாரிருக்க முடியும்?  கடவுளின் அழைப்பு நமக்கு ஆசீர்வாதத்தை மட்டுமல்ல, பாடுகளையும் கொண்டு வருகின்றன அல்லவா?  (அப். 9:15,16)

மரியாளுக்கு எலிசபெத்தும், எலிசபெத்துக்கு மரியாளும் எவ்வளவாய்த் தேறுதலாயிருந்தார்களோ, அது போலவே நாமும் இருக்கத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  இத்தனைக்கும் எலிசபெத்து தனிமையாயிருக்கவில்லை.  பேச இயலாதவராக இருந்தாலும் அன்பான கணவர் கூடவே இருந்தார்.  இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு பெண் துணை போலாகுமா? என் முகம் சற்று சோர்ந்து போனால் என்னை ஏந்திக் கொள்ள அன்பான குடும்பம் உண்டு.  ஆனாலும், ஊழியக்காரர் சொல்கிற ஒரு அன்பான் வார்த்தை, சக விசுவாசி கூறும் ஊக்கமூட்டும் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதல்!.

நானும் போதகன்தான், ஆசிரியன்தான்.  இரண்டுக்குமே Teacher என்பதுதான் ஆங்கிலப்பதம்.  பிறருக்காக ஜெபிக்கிறேன், கடவுளின் கிருபையால் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கிறேன். ஆனால் எனக்குக் கூட

‘யாரும் இல்லைக் காப்பாற்றிட, தோளில் சாய்த்து என்னைத் தேற்றிட’

என சில நேரங்களில் பாடத்தோன்றுகின்றது.  லூக்கா 9:58ல்,  நமது ஆண்டவர் ‘மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’ என்றாரே, அது வெறும் பாயும் தலையணையும் தான் என்று எண்ணுகிறீர்களா?  இயற்கையிலேயே மனிதன் ஒரு சமுக விலங்காயிருக்கிறான். சக மனிதர் உதவி இல்லாமல் அவனால் வாழ முடியாது.  கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  (சங்.133, பிர.4: 9-12)  நல்ல வேளையாக நமதாண்டவர் ‘திருவிருந்து’ என்னும் சாக்கிரமெந்தை ஏற்படுத்தினார்.  அதன் அர்த்தமே ஐக்கியத்தில் நிலைத்திருப்பதுதான்.

ஒரு மனிதர் ‘சபைக்கு வந்துதான் கடவுளைத்தொழ வேண்டுமென்பதில்லை. நான் வீட்டிலேயே ஜெபிப்பேன். சபை கூடி வருதல் எனக்கு அனாவசியம்’ என்று கூறிக்கொண்டு ஆலயத்துக்கு வராதிருந்தார்.  போதகர் அவரது வீட்டுக்கு ஓரிரவு வேளையில் போனார். குளிர் காலமாக இருந்தபடியால் இருவரும் கணப்பருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போதகர் எழுந்து எரிந்துக் கொண்டிருந்த விறகுகளில் இருந்து ஒரு விறகை எடுத்து தனியே வைத்தார்.  கொஞ்ச நேரம் எரிந்த விறகு விரைவிலேயே அணைந்து போயிற்று.  போதகர் எதுவும் கூறாமலே இதன் பொருளைப் புரிந்து கொண்ட அந்த மனிதர், “ஐயா, நாளை முதல் நான் ஆலயத்துக்கு வந்து விடுகிறேன்’ என்றார்.  நாம் கிறிஸ்துவின் அவயவங்களாயிருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் மிகவும் தேவையுள்ளவர்களாக இருக்கிறோம்.  இதை உணர்ந்து கொண்டு கிறிஸ்துவின் அன்பில், ஐக்கியத்தில் நடந்து கொள்ள கடவுள் நமக்கு அருள் செய்வாராக.

No comments:

Post a Comment